ஓட்டுக்கு ரூ.5,000: பண வினியோகத்தில் தி.மு.க., முதலிடம்

00:21 Edit This 0 Comments »

தி.மு.க., கூட்டணி, ஓட்டுக்கு, 5,000 ரூபாய் கொடுக்கும் பணியை துவங்கி விட்டது. பணப் பட்டுவாடாவை முடிக்க, இலக்கும் நிர்ணயித்து, வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. எதிரணியினர், வாக்காளர்களை அணுகுவதற்கு முன்பே, ஓட்டுகளை உறுதி செய்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர். வேட்பாளர் கவனிப்புக்காக, தி.மு.க., கூட்டணியில், தொகுதி வாரியாகத் தனிக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள், தொகுதியில் உள்ள வார்டு வாரியாக வேட்பாளர்களை, அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு ஏற்ப பிரித்துள்ளனர். இந்த குடியிருப்புகளில் உள்ள நலச்சங்க நிர்வாகிகளிடம், அக்குடியிருப்புகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணத்தைக் கொடுத்து வருகின்றனர். ஜாதி வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில், ஜாதி சங்கங்களின் கிளை நிர்வாகிகளிடம், வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணப் பட்டுவாடா நடக்கிறது. தொழிற்கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில், தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் பணப் பட்டுவாடா குழுக்கள், பணப் பரிவர்த்தனையை நடத்துகின்றன.

தேர்தல் கமிஷனின் கெடுபிடியால், போர்வேல் அமைத்துக் கொடுத்தல், குடிநீர் பைப் லைன் மற்றும் குடிநீர் தொட்டிகள் கட்டிக் கொடுத்தல் போன்றவை பெரும்பாலும் கைவிடப்பட்டு, நேரடியாக பணமே வழங்கப்படுகிறது. வாக்காளர்களிடம் உறுதி செய்கின்றனர்: அந்தந்தப் பகுதிக்கு ஏற்ப குடியிருப்பு நலச் சங்கம், ஜாதி சங்கங்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் போன்ற அமைப்புகளிடம் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மொத்தமாக தொகையைக் கொடுத்தாலும், வாக்காளர்களுக்கு அத்தொகை சென்றடைந்ததா என்று பணப் பட்டுவாடா குழுக்கள் உறுதி செய்கின்றன. இதற்காக, பெண்களை உறுப்பினர்களாகக் கொண்டு பட்டுவாடாக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள், எந்தப் பகுதியில் பணப் பட்டுவாடாவை உறுதி செய்ய வேண்டுமோ, அப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில், வீடுவீடாகச் சென்று ஓட்டு சேகரிப்பது போல, வாக்காளர்களிடம் பணம் வந்து சேர்ந்ததா என, உறுதி செய்கின்றனர். உறுதி செய்யும் பணியில், ஆண்களை விட, பெண்களே பொருத்தமானவர்கள் என்றும் சந்தேகம் ஏற்படாது என்றும், அவர்களை நியமித்துள்ளதாகக் கூறுகின்றனர்.

"குடிமகன்'களுக்கு தனி கவனிப்பு: குடிமகன்களை கவனிப்பதற்கு, பண பட்டுவாடாக் குழுவிலேயே, தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, அந்தந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மொத்தமாக அல்லது தினமும் ஒரு தொகையை அளித்து விடுகின்றனர். குழுவின் பிரதிநிதிகள் கூறும் நபர்களுக்கு உற்சாக பானத்தை டாஸ்மாக் கடைகள் வழங்குகின்றன. நொறுக்குத் தீனிகளை, டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்கள் கொடுக்கின்றன. டாஸ்மாக் கடைகளில், பணத்தை மொத்தமாகக் கொடுப்பதாலோ அல்லது தினந்தோறும் செட்டில் செய்வதாலோ, அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்யும் போது, டாஸ்மாக் கடைகளில், பண இருப்பில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால், பட்டுவாடா குழுவின் பிரதிநிதி, டாஸ்மாக் கடையை அவ்வப்போது, தொடர்பு கொண்டு பணத்தை செட்டில் செய்கிறார்.

9ம் தேதி இலக்கு: ஓட்டுப் பதிவுக்கு நான்கு நாட்களுக்கு முன்பே, பணப் பட்டுவாடாவை முடித்துக் கொள்ள வேண்டும் என, இலக்கு நிர்ணயித்து குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பிற கட்சிகள், வாக்காளர்களை நெருங்கும் முன், அவர்களை தங்களுக்கு ஆதரவாக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தத் தேதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், கொடுத்த பணம் போதாது என்று பிரச்னை எழும்போது அதை சமரசம் செய்யவும், கூடுதலாக பணம் கொடுக்கவும், போதிய அவகாசம் வேண்டும் என்பதற்காகவும், ஏப்ரல் 9ம் தேதி இலக்காகக் குறிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். ஓட்டுப் பதிவுக்கு முந்தைய சில தினங்கள், தேர்தல் கமிஷனின் கெடுபிடி தீவிரமாக இருக்கும் என்பதும், ஏப்ரல் 9ம் தேதியை இலக்காக கொண்டதற்கு காரணமாகக் கூறுகின்றனர். 
source: http://election.dinamalar.com/election_news_detail.php?id=1473

0 comments:

MGR

MGR songs...